ஏழு ஸ்வரங்களுக்குள் இத்தனை அர்த்தமா? Ezhu swarangalukkul So Many Meaning in Single Song – Kannadasan

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்… Kannadasan Song – ஒரு பாடலில் வாழ்க்கையின் உண்மையை சொன்ன கவிஅரசர்

எஸ்.கோகுலாச்சாரி – Sri. Gokulachari

வியரசு கண்ணதாசன் எத்தனையோ தத்துவ பாடல்களை எழுதியிருக் கின்றார்.  ஆனால் சிகரம் வைத்தால் போல் எக்காலத்துக்கும் பொருந்தும் படி அவர் எழுதிய ஒரு அற்புதமான பாடல் அபூர்வ ராகங்கள் என்கின்ற படத்தில் அவர் எழுதிய பாடல்.

இசையின்  முகத்தையே பல்லவியில் அவர் கொடுத்திருப்பார். இசை, தமிழ், தத்துவம் எல்லாவற்றையும் உணர்ந்தவர்களாலும், வாழ்க்கையின் அனுபவத்தை அறிந்தவர்களாலும்  மட்டுமே காலம் கடந்து நிற்கும் இத்தகைய பாடல்களைத்  தர முடியும். என்ன அற்புதமான ஒரு பாட்டு? ஒவ்வொருவருக்கும் ஒரு உன்னதமான கேள்வியை மனதில் எழுப்பி, அவர்களையே சிந்திக்க வைத்து, மகத்தான விடையை தேடச் சொல்லும் பாட்டு இந்தப்  பாட்டு. திருமதி வாணிஜெயராம் அவர்களின் அதிஅற்புதமான குரல் இந்தப் பாட்டுக்கு அத்தனை கச்சிதமாகப்  பொருந்தியிருக்கிறது. ஒவ்வொரு சரணத்தையும் ஒவ்வொரு ராகத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் அமைத்திருப்பார். அந்த ராகங்களும் அந்த சரணத்தின் ஒட்டுமொத்தமான சாரத்தைச்  சொல்லும்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

            இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி

            காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்வெறும்

            கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

Ezhu swarangalukkul Ethanai paadal
Ezhu swarangalukkul Ethanai paadal
Idhaya churangathul Ethanai kelvi

                இந்த அற்புதமான பாடல் பிறந்த பின்னணி- இதிலுள்ள கருத்துக்கள் இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

                இந்த படம் வெளிவந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய படம். ரொம்ப வித்தியாசமான படம்.

                ஒரு தாயும் மகளும். ஒரு தந்தையும் பிள்ளையும்.

                மகனின் தந்தை தாயின் மகளை காதலிக்க -தந்தையின் மகன் மகளின் தாயைக் காதலித்தால் இருவருக்கும் என்ன உறவு?

                நம்பமுடியாத-  இந்த நுணுக்கமான கதையை எந்த ஆபாசமும் இல்லாமல் உணர்ச்சிப் பிழம்பாக எடுத்திருப்பார் பாலச்சந்தர். 

                அந்தத் தந்தை பெரிய தொழிலதிபர். மகன் ஒரு புரட்சிக்காரன். கருத்து வேறுபாடு.

                தாய் மிகச்சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகி. தாய்க்கும் மகளுக்கும் கருத்து வேறுபாடு வந்து மகள் தாயை விட்டு பிரிந்து விடுகின்றாள்.

                இவ்வளவு பிரச்சனைகள் இந்த கதையில்.  அழகான பாடல்களை ஆங்காங்கே கொடுத்திருப்பார் கவியரசர் கண்ணதாசன் .அவரை விட்டால் வேறு யாரும் இத்தனை அழகான பாடல்களை எழுத முடியாது.

                அதில் உள்ள முன்னுரை அதாவது டைட்டில் பாடல் தான் இந்தப் பாடல்.

                எல்லாவற்றையும் படம் பிடித்து விட்டு இந்தப் பாடலுக்காக கவிஞருக்குக் காத்திருந்தார் பாலச்சந்தர். கவிஞரோ தமக்கே உரிய முறையில் இதோ அதோ என்று தாமதம் செய்து கொண்டிருந்தார்.

                ஒரு நாள் மிகுந்த கோபத்தோடு பாலச்சந்தர் இன்னமும் பாட்டைத் தரவில்லையா என்று இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களிடம் கோபமாகக் கேட்டபொழுது கவிஞர் இப்பொழுதுதான் வந்து பாடலை எழுதிக் கொடுத்து விட்டுப் போய்விட்டார். இதில் 20 30 சரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த சரணத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லிப் போய்விட்டார்.

                நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால்,  இசையமைத்து ஒளிப்பதிவு செய்துவிடலாம் என்று சொல்ல, பாலச்சந்தர் அந்தப் பாடலைப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போய்விட்டார். ஒவ்வொரு சரணமுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருக்க – ஒரு ஐந்து நிமிடப் பாடல்… இத்தனைச் சரணங்களை எப்படி வைப்பது என்று திகைத்து- எதை விடுவது எதை சேர்ப்பது என்று திணறிப் போனார்.

                மிகுந்த முயற்சிக்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த சரணங்கள் தான் இந்த பாடல்.

                கர்நாடக சங்கீதத்தை முறையாகவும் ஆழமாகவும் பயின்ற மிகச் சிறந்த பாடகி வாணிஜெயராம் இந்தப் பாடலை அவ்வளவு உணர்ச்சியோடு பாடியிருப்பார்.

                இனி இதன் முதல் சரணத்தைப்  பாப்போம்.இது ராகமாலிகையில்  அமைந்த பாடல். முதல் ராகம் பந்துவராளி. இதில் பல்லவியையும் ஒரு சரணத்தையும் அமைத்திருக்கிறார்.

Aboorva Raagangal – Ezhu Swarangalukkul Ethai Song – Music Review

பந்து வராளி (Panthuvarali Raagam)

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்விஅது

கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்மனிதன்

இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

                பாட்டு இசை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தப் பகுதியைப் பாருங்கள் எப்படி எழுதியிருப்பார் கவிஞர். அவருக்கு இசையும் தெரிந்து இருக்கிறது. மனிதனின் இதயமும் புரிந்து இருக்கிறது.

                எத்தனை பாடல்கள் மேற்கத்திய இசை கர்நாடக இசையில் இருந்தாலும் அவை ஏழு சுரங்களுக்குள் தானே அடக்கம். அதைப் போன்று எத்தனை மனிதர்கள் இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்கள் இந்த சின்ன இதயத்தில் தானே அடக்கம்.

                ஏழு ஸ்வரங்களுக்குள் கோடிக்கணக்கான பாடல்கள் எழுவது போல உள்ளங்கை அகலமுள்ள இந்த இதயத்தில் இருந்து இந்த உலகத்தையே மறைத்து விடும்-மறந்து விடுகின்ற எத்தனை கேள்விகள் எழுகின்றன.

                நாம் பார்க்கின்ற மனிதர்களுக்குள் தான் எத்தனை சலனம். ஆனால் அவையெல்லாம் உண்மையா?கற்பனை சந்தோஷங்கள் தானே. நேற்று கழித்து விட்டோம். இன்று இதோ தூங்கி எழுந்து விட்டோம். உடனே நாளை என்ன செய்வது என்ற கேள்வி எழுகின்றது .ஏதோ திட்டமிடுகிறோம். முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறோம்.நினைத்தது கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் அந்த ஆசை திருப்தி அடைந்து விடுவதில்லையே.

                கூட்டிக் கழித்து பார்த்தால் நாம் அடைந்ததை விட- அடைய வேண்டும் என்கிற ஆசையும் அதற்கான கேள்விகளும் தானே மிச்சமாக இருக்கிறது.

                உபநிடதங்கள் கூட விளக்க முடியாத உன்னத கருத்துக்களை கவிஞர் என்ன அநாயாசமாக விளக்கியிருக்கிறார் இனி அடுத்த சரணம்.சிவரஞ்சனி ராகத்தில் உருக்கமாகப்  போ ட்டிருக்கிறார்.

சிவரஞ்சனி (Siva Ranjani Raagam)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று

                ஒருபக்கம் எதார்த்தம். ஒரு பக்கம் தத்துவம். ஒருபக்கம் உணர்ச்சி. ஒரு பக்கம் மனதின் எழுச்சி. ஒருபக்கம் பதட்டம். ஒருபக்கம் நிதானம். ஒருபக்கம் கேள்விகள். இன்னொரு பக்கம் அதன் பதிலைத் தேடுகின்ற வேள்விகள். வாழ்வின் சலனங்களை இத்தனை நுணுக்கமாக யாரால் படம்பிடித்து காட்ட முடியும்.

                அழும்போது சேர்ந்தும் அழலாம். தனித்தும் அழலாம். ஒருவருக்காக மற்றவரும் அழலாம். ஆனால், ஒருவன் பசி அடங்க இன்னொருவன் உண்ண முடியுமா.

                இந்த பூமி வேறு எங்கிலும் பார்க்காத ஒரு புதுமை இந்த உவமை.

                பொங்கிவரும் அழுகைக்கு இந்த வரிகள் தருகின்ற ஆறுதலும் தேறுதலும் எந்த புத்தகத்திலும் கிடைக்காதவை. எனக்காக நீ அழலாம்- அது இயல்பு தான் .நடப்பது தான். ஆனால் என் கடமையை நான் தானே செய்தாக வேண்டும். இதுதான் அனுபவம் என்பது.

                அனுபவித்தே தான் அறியவேண்டியது வாழ்க்கை. இன்பமோ துன்பமோ மற்றவர்கள் பங்கெடுத்தாலும் செய்ய வேண்டிய செயல்களை அவரவர்கள் தானே செய்ய வேண்டும். நமக்கு உயிரையும் உடலையும் கொடுத்து நாம் நடமாடவும் வேலை செய்யவும் இந்த பூமியையும் கொடுத்து அனுப்பிய ,- செய்ய வேண்டிய கடமைகளை நாம் செய்ய வேண்டும் என்று தானே நிர்ணயம் செய்து அனுப்பி இருக்கிறார். இந்த உணர்ச்சியும் புரிதலும் வந்து விட்டால் பதட்டங்கள் விலகிவிடுவேன்.இனி அடுத்த சரணம் சிந்துபைரவியில்…

Kaviyarsar Kannadhasan

சிந்துபைரவி (Sindhuvbairavi Raagam)

  ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்

   அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

    பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்?

    அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

                இன்னொரு படத்தில் கவியரசு மிக அற்புதமாக எழுதி இருப்பார். விதியின் கரங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்.மதியும் மயங்குதடா- மனமும் கலங்குதடா- கொடுக்க எதுவுமில்லை- என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்து விட்டேன் என் கவலை முடிந்ததடா என்று.

                அதே கருத்தை இந்த இடத்தில் வேறு ஒரு கோணத்தில் வேறு அமைப்பில் அழுத்தமாகச் சொல்கிறார்.

                நம் பிறப்பு நம் கையில் இருந்ததா என்ன? அப்படி இருந்தால் நாம் நம் விருப்பமும் தேவையும் அறிந்து பிறப்பினைத்  தேர்ந்தெடுத்து இருப்போம்.

                சரி; நம்மை பெற்றவர்கள் விருப்பப்படியாவது இருந்ததா? இல்லையே ! நாம் பிறந்ததற்கு அவர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இல்லையே.

                எத்தனையோ ஆசைகள் …….எத்தனையோ எதிர்பார்ப்புகள்…….. எத்தனையோ திட்டங்கள்……..

                ஆனால் அடுத்தடுத்து நடந்ததெல்லாம் அவன் போட்ட திட்டம் அல்லவா

                சரி; நடந்தது நடந்து விட்டது. இனி பிறந்தாகிவிட்டது. வகுத்த பாதையில் பயணம் செய்வதை தவிர இனி என்ன வழி இருக்கிறது?

                இனி அச்சப்படுவதால் நமக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. இனி நமக்கு ஒரே வழி- விதிக்கப்பட்ட வழியில் பயணம் செய்வதுதான். இதுதான் என்பது தெரிந்துவிட்டால் அதற்குப் பிறகு அதிலே என்ன கஷ்டம் இருந்துவிடப் போகிறது? இதற்கு வேண்டியது துணிவுதான். துணிந்தவனுக்கு துக்கமில்லை என்ன அழகாக சொல்லுகிறார் கவிஞர். அடுத்து காம்போதி

காம்போதி (kambodhi Raagam)

நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை

நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்கஎந்த

வேதனையும் மாறும் மேகத்தை போல

                நம் பிறப்பு நம் கையில் இல்லை. நம் வாழ்க்கைப் பயணமும் நம் கையில் இல்லை. ஆனால் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.

                அப்படியானால் என்ன குறிக்கோள்?

                எதை நினைத்து மேலே பயணம் செய்வது ?

                இந்த கேள்வி எழுகிறது அல்லவா!

                இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

                ஒரே பதில் தான் -சென்றது சென்றுவிட்டது. வருவது நன்றாக இருக்கும் என்கிற நம்பிக்கை தான் இந்த பயணத்தை நடத்துவதற்கு தூண்டுகோலாக இருக்கிறது.

                நாளை பொழுது நமக்கானது என்று நம்புவதுதான்  வாழ்க்கை.

                அதை நமக்காக நடத்துவதற்கு ஒருவன் இருக்கின்றான். எத்தனை துன்பங்கள் இருந்தாலும் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து விடுவதில்லை.

                கருத்த மேகங்கள் மழையைப் பொழிந்த பின், வெளுத்து தானே ஆக வேண்டும்.

                எத்தனைதான் இரவு நேரம் நீடித்தாலும்,  முடிவில் ஒரு விடியல் பிறக்காதா என்ன?

     அந்த விடியலை நினைக்கும் நம்பிக்கைதானே வாழ்க்கை. அந்த நம்பிக்கையை நோக்கி நம்மை நகர்த்துவது இந்தப்பாடலின் வெற்றி.

     அந்த நம்பிக்கை நம் மனதில் இருந்தால்  நாளைய வேளை நம் வேளைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்குச்  சோர்வு வருகின்ற பொழுது இந்தப் பாடலை ஒரு முறை கேளுங்கள். உங்கள் சோர்வு இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவாகிவிடும். தெளிவான மனதில் நாளை ய பொழுது குறித்த தயக்கமோ  மயக்கமோ  இருக்காது.   

கவியரசர் கண்ணதாசன் இயற்றிய ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் பாடலின் அருமையான விளக்கத்தை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.